வெகுஜனன்- வட புலத்து சங்கானைப் பட்டின சபையின் முன்னாள் தலைவரும் பொதுவுடமை இயக்கத்தின் மூத்த உறுப்பினரும் சமூக விடுதலைப் போராளியுமான நாகலிங்கம் முத்தையா தனது எண்பத்து நான்காவது வயதில் கடந்த 22-07-2006 அன்று சங்கானையில் காலமானார். மான் முத்தையா என்ற பெயர் வட புலத்திலும் சங்கானைப் பிரதேசத்திலும் பலராலும் அறியப்பட்ட பெயராக இருந்து வந்தது. உறுதியான உடற்கட்டும் நிமிர்ந்த நடையும் மட்டும் மான் என்ற அடைமொழிக்கு காரணமாக அமையவில்லை. சமூக அநீதிகளையும் அடக்குமுறைகளையும் எதிர்த்து நிற்கும் துணிவும் ஆற்றலும் அவரது இளமைக்காலம் முதல் இருந்து வந்தமை அவரை மனிதர்களிடையே மனிதனாக அடையாளம் பெறவைத்தது.
மான் முத்தையா இளமைக்காலம் முதல் பொதுவுடமைவாதியாகவும் அதன் காரணமாக சமூக விடுதலைப்போராளியாகவும் வாழ்ந்து வந்தவர். பொது வாழ்வில் சங்கானைப் பட்டின சபை உறுப்பினராகவும் பின்பு ஒரு பதவிக் காலத்தின் தலைவராகவும் பதவி வகித்து மக்களுக்குப் பணியாற்றியவர். நா. (மான்) முத்தையா சங்கானையில் அக்காலத்திய மலேயாத் தொடர்புடைய குடும்பத்தில் பிறந்தவர். அதன் காரணமாக இளைமைக்காலத்தில் மலேசியாவில் கல்வி கற்றவர். ஆங்கிலத்தில் போதிய புலமையும் பெற்றவர். மலையா கம்யூனிஸ்ட் கட்சி கொலனித்துவத்தையும் பிற்போக்கு சக்திகளையும் எதிர்த்து கடுமையான போராட்டங்களை முன்னெடுத்து வந்த அன்றைய கால கட்டத்தில் அப்போராட்டங்களினால் ஈர்க்கப்பட்ட இலங்கைத் தமிழ் இளைஞர்களில் முத்தையாவும் ஒருவராகிக் கொண்டார். அதன் மூலம் அவர் மாக்சிசத்தை ஏற்று பொதுவுடமை இலட்சியங்களைக் சுமந்தவாறு இலங்கைக்கு தனது இளமைக் காலத்தில் திரும்பினார். தான் பிறந்த சங்கானை மண்ணில் தனது வாழ்வை நிலைப்படுத்திக் கொண்டார்.
அக் காலத்தில் வடபுலத்திலே பொதுவுடமை இயக்கம் தோழர் மு.கார்த்திகேசன் மற்றும் ஆரம்ப முன்னோடிகளின் தலைமையில் அரசியல் பணிகளை முன்னெடுத்து வந்தது. அப் பொதுவுடமை இயக்கத்தில் இளைஞனாக முத்தையா இணைந்து கொண்டார். அவர் காங்கேசன்துறையில் ஆரம்பிக்கப்பட்ட சீமெந்து தொழிற்சாலையில் ஒரு மேற்பார்வையாளராக வேலைக்கு சேர்ந்தார். வெள்ளைக்கார தலைமை நிர்வாகிகளின் கீழ் அத் தொழிற்சாலைத் தொழிலாளர்கள் எவ்வித உரிமைகள் சலுகைகள் இன்றி வேலை செய்து வந்த சூழலில் முதன் முதலில் தொழிற்சங்கம் கட்டும் முன் முயற்சி எடுக்கப்பட்டது. அதனை அங்கு தொழிலாளியாகக் கடமைபுரிந்த பொதுவுடமைவாதியான எஸ்.சந்தியாப்பிள்ளை முன்னின்று செயல்படுத்தினார்.
அத்தகைய தொழிற்சங்க உருவாக்கத்திற்கு முத்தையாவும் ஒத்துழைப்பு வழங்கினார். இவர்களது முயற்சியில் பயிலுனராக நியமனம் பெற்ற கே.ஏ. சுப்பிரமணியமும் இணைந்து கொண்டார். இம் மூவரும் ஏனைய தொழிலாளர்களை இணைத்து காங்கேசன்துறை சீமெந்து தொழிற்சாலையில் ஆரம்ப தொழிற்சங்கத்தைதோற்றுவித்து கோரிக்கைகளும் முன்வைக்கப் பட்டன. அதன் விளைவு இம் மூவரும் ஒருவர் பின் ஒருவராக நிர்வா கத்தினால் வெவ்வேறு காரணங்கள் கூறப்பட்டு வேலை நீக்கம் செய்யப்பட்டனர். கே.ஏ. சுப்பிரமணியம் பொதுவுடமை இயக்கத்தின் வடபுலத்து முழுநேர அரசியல் ஊழியராகினார். முத்தையா வேறு தொழில் தேடினார். பின்பு சுய தொழில் முயற்சியிலும் ஈடுபட்டு திருமணமாகி குடும்ப வாழ்விலும் ஈடுபட்டார். சந்தியாப்பிள்ளை தொடர்ந்து ஒட்டுநராக தொழில் செய்ததுடன் கட்சிப்பணிகளிலும் ஈடுபட்டார்.
முத்தையா சங்கானைப் பிரதேசத்தில் பொதுவுடைமை கட்சியை விஸ்தரித்து வாலிபர் இயக்கத்தை கட்டினார். அக் காலத்தில் பல இளைஞர்கள் முத்தையாவின் வழிகாட்டலில் அணி திரண்டனர். அத்துடன் வட புலத்தில் பொதுவுடைமை வாலிபர் இயக்கத்தின் முதலாவது மாநாடு வெற்றிகரமாக இடம்பெறுவதற்கும் முத்தையா முன்னின்று செயல்பட்டார். வட புலத்திலும் சங்கானைப் பிரதேசத்திலும் பொதுவுடைமை இயக்கம் வளர்ச்சி பெற்ற சூழலில் உள்ளூராட்சி சபைகளுக்கு பல பொதுவுடைமைவாதிகள் மக்களால் தெரிவு செய்யப்பட்டனர். சங்கானை கிராமசபையிலும் பின்பு பட்டின சபையாக தரம் உயர்ந்த நிலையிலும் பொதுவுடைமை வாதிகள் உறுப்பினர்களாகினர். அதன் காரணமாக அறுபதுகளின் முற்கூறிலே சங் கானைப் பட்டின சபையின் தலைவராக மான் முத்தையா பதவி பெற்று அப்பிரதேச அபிவிருத்திப் பணிகளை முன்னெடுத்தார். அக்கால கட்டத்தில் சுன்னாகம் காங்கேசன்துறை வல்வெட்டித்துறை கட்டைவேலி யாழ்ப்பாணம் பருத்தித்துறை போன்ற உள்ளூராட்சி சபைகளில் உறுப்பினர்களாக தலைவர்களாக இடதுசாரி செயற்பாட்டாளர்கள் பதவி வகித்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கதாகும். 1966 ஆம் ஆண்டு ஒக்டோபர் 21 எழுச்சி வட புலத்தில் தாழ்த்தப்பட்ட மக்களின் போராட்டங்களுக்கும் ஜனநாயக உரிமைகளை வென்றெடுப்பதற்கும் உரிய வழிகாட்டியாக அமைந்தது.
சாதியத்தையும் தீண்டாமையையும் எதிர்த்து எழுந்த அந்த எழுச்சியும் அதன் பாதையில் இடம்பெற்ற வெகுஜனப் போராட்டங்களும் தமிழர் வரலாற்றில் முக்கிய திருப்புமுனையாக அமைந்தது. அப்போராட்டங்களில் தாழ்த்தப்பட்ட மக்கள் மட்டும் கலந்து கொள்ளவில்லை. உயர்த்தப்பட்டவர்கள் என்போர் மத்தியில் பொதுவுடைமை வாதிகள் இடது சாரியினர் ஜனநாயக சக்திகள் மற்றும் நல்லெண்ணம் கொண்டோர் தாழ்த்தப்பட்ட மக்களுடன் இணைந்து நின்று போராடிய போராட்டங்களாகவே அவை அமைந்து கொண்டன.
அந்த வகையில் சங்கானைப் பிரதேசத்தில் தேநீர் கடைகளிலான சமத்துவம் கோரிய வெகுஜனப் போராட்டத்தில் மான் முத்தையா முன்னணியில் நின்றார். 1967 இல் இடம்பெற்ற அவ் வெகுஜனப் போராட்டத்தில் சமத்துவத்தை மறுத்து நின்ற தமது உறவினர்களான உயர்த்தப்பட்ட சமூகத்தினரின் அடக்குமுறைகளை எதிர்த்து மக்கள் பக்கம் நின்றார். அதன் காரணமாக அவர் பொலிஸ் தாக்குதல்களுக்கு உள்ளாகி உள்வெளிக் காயங்களுக்கும் ஆளாகினார். அத்துடன் சங்கானையில் அவரது வீடு சாதி அகம்பாவம் கொண்டவர்களால் அடித்து உடைக்கப்பட்டதுடன் அங்கு தொடர்ந்து இருக்க முடியாத உயிராபத்துச் சூழலில் குடும்பத்துடன் இடம்பெயரவும் வேண்டி ஏற்பட்டது. இருப்பினும் மான் முத்தையா அநீதிகளுக்கும் அடக்கு முறைகளுக்கும் அடிபணிந்து விடவில்லை. ஒரு பொதுவுடைமைப் போராளிக்கு முன்னால் உள்ள வரலாற்றுக் கடமையை முன்னெடுப்பதில் உறுதியுடனும் துணிவுடனும் செயல்பட்டமை அன்றைய நிலையில் முன்னுதாரணமாக அமைந்தது. 1966-71 கால கட்டத்தில் மான் முத்தையா ஏனைய பொதுவுடைமை வாத முன்னோடிகளுடன் இணைந்து வடபுலத்தில் முன்னெடுத்த தீண்டாமை ஒழிப்புக்கான வெகுஜனப் போராட்டங்கள் இறுதியில் வெற்றிபெற்றன.
தோழர் மான் முத்தையா அவர்களின் மறைவை நினைவு கூர்ந்து கொள்ளும் இவ்வேளை அவர் விட்டுச் சென்ற பொதுவாழ்வினதும் போராட்டங்களினதும் அடிச் சுவடுகள் தெளிவாகக் கண்முன்னே பளிச்சிட்டு நிற்கின்றன. அவரது எண்பத்திநாலு வருட வாழ்விற்கு மிகக் கனதியான அர்த்தங்களும் அடையாளங்களும் உண்டு. ஏற்றத்தாழ்வும் சுரண்டலும் சமூக நீதி மறுப்பு களும் கொண்ட இன்றைய சமூக அமைப்பில் ஒரு பொதுவுடைமைவாதி தனது ஆற்றலைப் பயன்படுத்தி மனிதத்துவத்திற்காகப் போராடுவதில் பொதுவுடைமை பாரம்பரியத்தை இறுதிவரை மான் முத்தையா கொண்டிருந்தார் என்பது அவருக்குரிய தனித்துவச் சிறப்பாக அமைந்து கொண்டது. அதன் காரணமாகவே புதிய - ஜனநாயக கட்சி 2003 இல் தனது 25 ஆவது ஆண்டு விழாவின் போது மான் முத்தையாவையும் ஏனைய ஐந்து தோழர்களையும் மூத்த பொதுவுடைமைப் போராளிகள் முன்னோடிகள் என கௌரவித்து நினைவு விருதுகளையும் வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.
இன முரண்பாடும் தேசிய இனப்பிரச்சினையும் உச்ச நிலை நெருக்கடியாகி நிற்கும் இன்றைய சூழலில் மான் முத்தையா போன்ற பொதுவுடைமைவாதிகளின் உறுதிமிக்க அரசியல் சமூகப் போராட்டங்களின் அனுபவங்கள் படிக்கப்படுவது பன்முகப் பயன்கள் தரக்கூடியனவாகும். மறைந்த நா.முத்தையா அவர்களுக்கு எம் அனைவரினதும் அஞ்சலியும் அவரது குடும்பத்தினருக்கு அனுதாபமும் உரித்தாகுக.
www.Thinakural 20.10.06
No comments:
Post a Comment