Monday, November 27, 2006

ஏ-9 வீதியை மூடிவைத்திருப்பது மக்கள்

ஏ-9 வீதியை மூடிவைத்திருப்பது மக்கள் விரோதமானது

- ஞானம் அருட்பிரகாசம்

இலங்கையில் ஏனைய பகுதிகளுக்கும் யாழ்ப்பாணக் குடாநாட்டுக்குமான ஏ-9 பாதையை அரசாங்கம் மூடி மூன்றுமாதங்களுக்கு மேலாகிவிட்டன. இப்பாதை மூடப்பட்டதால் யாழ் குடாவில் வாழுகின்ற சுமார் 5லட்சம் மக்கள் மோசமான உணவு,மருந்து,எரிபொருள் மற்றும் பொருட்களின் தட்டுப்பாட்டாலும், சுதந்திரமான போக்குவரத்து தகவல் தொடர்பு இன்மையாலும் அல்லப்படுவது சொல்லித்தான் தெரியவேண்டியதில்லை.

நோக்கங்கள் வௌ;வேறாக இருப்பினும் இப்பாதையைத் திறக்கும்படி யாழ்ப்பாணமக்கள், விடுதலைப் புலிகள், தென்னிலங்கை மனிதாபிமான சக்திகள் என்பன வேண்டுகோள் விடுத்தவ்ணம் உள்ளன. இப்பொழுது இலங்கைக்கு உதவி வழங்கும் இணைத் தலைமை நாடுகளும் வாசிங்டனில் கூடிய பொழுது இவ்வாறானதொருவேண்டுகோளை விடுத்துள்ளன.
ஏ - 9 வீதிய10டாக பொருட்கள் கொண்டு செல்லும் வர்த்தகர்களிடம் கப்பம் அறவிடுவதையும், தமக்கு விரோதமானவர்களைக் கடத்துவதையும் கைவிடுவதாக உறுதியளித்தால் பாதையைத் திறக்க முடியும் என அரசாங்கம் கூறுகின்றது. பலிகளைப் பொறுத்தவரை இவை இரண்டையும் அவர்கள் என்றுமே கைவிடப்போவதில்லை. அப்படிப்பார்த்தால் இப்பாதை என்றுமே திறக்கப்படப்போவதில்லை என முடிவாகின்றது.

எனவே இப்பிரச்சினைக்கு தீர்வுதான் என்ன? அரசாங்கத்தின் நிலைப்பாடு சரியானது தானா?
புலிகள் அமைப்பு ஒரு பாசிச இயக்கம். அதற்கு அதன் சொந்த மக்களைப் பற்றியே எந்தவித அக்கறையும் கிடையாது. தேசியஇன விடுதலை என்று சொல்லிக்கொண்டு தனது சொந்த இன மக்களையே ஆயிரக்கணக்கில் கொன்று குவித்துள்ள இயக்கம் என்றால் அது விடுதலைப் புலிகள் மட்டும்தான். சமீபத்திய ஆய்வொன்றின்படி இலங்கை இராணுவம் கொலை செய்த தமிழ் மக்களைவிட புலிகள் கொலை செய்த தமிழ் மக்களின் எண்ணிக்கை மூன்று மடங்கு எனத் தெரியவருகின்றது. (அரசாங்கப் படைகளுடன் போரிட்டு மடிந்த புலி உறுப்பினர்களின் எண்ணிக்கை இதில் உள்ளடக்கப்படவில்லை)

எனவே இப்பாதை திறப்பு விவகாரத்தில் அரசாங்கம் தமது கட்டப்பாட்டிலிருக்கும் தனது சொந்தக் குடிமக்களான 5 லட்சம் யாழ்ப்பாண மக்களின் பிரச்சினையை எவ்வாறு கையாளுகின்றது என்பதே கேள்வியாகும். ஏனெனில் இம் மக்கள் 1995 அக்டோபர் 30ம் திகதி புலிகளால் பலவந்தமாக யாழ்ப்பாணத்தைவிட்டு வெளியேற்றப்பட்ட பின்னர் புலிகளின் வேண்டுகோளை ஏறறு வன்னி செல்லாமல் அரசாங்கக் கட்டுப்பாட்டிலிருந்த யாழ்ப்பாணத்துக்கு வந்து மீளக் குடியேறியவர்கள் என்பதை அரசாங்கம் மறந்துவிடக்கூடாது.
ஏ- 9 பாதை மூடப்பட்டிருப்பதால் புலிகளுக்கு மாதாந்தம் கிடைத்துவரும் சுமார் 30 கோடி ரூபா இழப்பு ஏற்படும், அது புலிகளைப் பாதிக்கும் என அரசாங்கம் தான் பாதையை மூடிவைத்திருப்பதற்கு நியாயம் கூறுகின்றது. புலிகளின் மாதாந்த வருமானம் ஆக இந்த 30 கோடி ரூபா தானா? இது மிகவும் சிறுபிள்ளைத்தனமானதும் சிரிப்புக்கிடமானதுமான கருத்தாகும்.

புலிகளின் வருடாந்த நிகர வருமானம் பல ஆயிரம் கோடி ரூபாக்கள் என மேற்குநாட்டு உளவு அமைப்புகளே கூறுகின்றன. புலம்பெயர் நாடுகளில் வாழுகின்ற லட்சக் கணக்கான தமிழ் மக்களிடமிருந்து புலிகள் மிரட்டிக் கறக்கின்ற பணம் கோடிக்கணக்கான ரூபா. இதுதவிர புலிகள் சர்வதேச hPதியாக நடாத்துகின்ற போதைவஸ்து வியாபாரம், ஆயுத வியாபாரம், கப்பல் போக்குவரத்து வியாபாரம் என்பனவற்றின் மூலம் கோடிக்கணக்கான ரூபா (முன்னாள் இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தியை கொலை செய்ததற்கு கூலியாக மேற்கு நாடொன்றிடமிருந்து பலநு}று கோடி ரூபாவை புலிகள் பெற்றதாக கூறப்படுகிள்றது)
இதுதவிர நோர்வேயும் வேறு சில வெளிநாட்டு உளவு நிறுவனங்களும் புலிகளுக்கு ஒழுங்கான முறையில் பணப் பட்டுவாடா செய்துவருகின்றனர்.

கொழும்பு, யாழ்பாணம் போன்ற அரசாங்கக் கட்டுப்பாட்டு நகரங்களிலும் ஏன் இந்தியாவிலும் மேற்கு நாடுகளிலும்கூட புலிகள் பல்வேறு வர்த்தக முயற்சிகளில் பலகோடி ரூபா முதலீடு செய்து பணம் சம்பாதிக்கிறார்கள். (இலங்கையில் இராணுவ உயர் அதிகாரிகளுக்கு கோடிக்கணக்கில் லஞ்சம் கொடுத்து இராணுவ ரகசியங்களை புலிகள் கறப்பதும் அண்மையில் அமெரிக்க அதிகாரிகளுக்கே புலிகள் லஞ்சம் கொடுக்க முற்பட்டதும் புலிகளின் அசுர உள்நாட்டு வெளிநாட்டு பணபலத்துக்குச் சான்றாகும்) கனடாவிலும் சில ஐரோப்பிய நாடுகளிலும் பெரும்பெரும் சுப்பமார்கேட்டுக்களை புலிகள் நிர்மாணித்திருக்கிறார்கள்.
கனடாவில் கடந்த லிபரல் அரசாங்கத்தில் அதிமுக்கிய பதவி வகித்த ஒருவரின் மகன் நாடாத்தும் சர்வதேச கப்பல் கம்பனி ஒன்றில் புலிகளும் ஒரு பங்குதாரர்கள் என புலனாய்வுத் தகவல்கள் கூறுகின்றன.

இதுதவிர புலிகளின் முகவர் அமைப்பான தமிழர் புனர்வாழ்வுக் கழகம் உலகம் முழுவதும் பலகோடி ரூபாவை புலிகளுக்காக திரட்டி வருகின்றது. இவையெல்லாம் ஒருபுறம் இருக்க புலிகளின் கட்டுப்பாட்டிலிருக்கும் வன்னிப் பிரதேசத்தில் மக்களுக்கு அரசாங்கமே நிவாரணப்பொருட்களை அனுப்புகின்றது. புலிகள் அங்குள்ள கிராமசேவகர்கள் மூலம் கூடுதலான ஆட்களின் பெயர்களை பதிவு செய்து தமது உறுப்பினர்களுக்குத் தேவையான உணவுப்பொருட்களை எடுப்பது ரகசியமானது அல்ல. புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிகளில் உள்ள வீதிகள், குளங்கள், பாடசாலைகள், வைத்தியசாலைகள் என எல்லாவற்றினதும் அபிவிருத்திக்கு அரசாங்கம் அனுப்பும் பணத்தை புலிகளே சூறையாடுகிறார்கள்.
புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியில் செயற்படும் அரச ஊழியர்கள் புலிகளின் நிகழ்ச்சி நிரல்களுக்கு ஏற்ப செயல்பட, அவர்களுக்கான சம்பளத்தை அரசாங்கமே வழங்குகின்றது.
இத்தனை வழிகளிலும் புலிகளுக்கு கிடைக்கும் வருமானம் எத்தனைகோடி ரூபாவாக இருக்கும் என கற்பனை செய்துபாருங்கள். இவையெல்லாவற்றையும் அரசாங்க நியாயப்படி நிறுத்தவல்லவா வேண்டும்.உண்மையில் புலிகளின் மொத்த மாதாந்த வருமானத்துடன் ஒப்பிடுகையில் ஏ-9 வீதியால் அவர்களுக்கு கப்பமாக கிடைக்கும் 30 கோடி ரூபா அவர்களது மாலை நேர தேனீர் செலவுக்கு ஒப்பானது என்றுதான் சொல்ல வேண்டும். எனவே ஏ-9 பாதையை அரசாங்கம் மூடிவைத்திருப்பதற்கான பிரதான காரணம் அரசாங்கம் கூறுவதுபோல புலிகளுக்கு கிடைக்கும் வருமானம் அல்ல. இராணுவ hPதியான காரணங்கள் இருக்க வேண்டும்.

புலிகளைப் பொறுத்தவரையில் ஏ- 9 வீதியைத் திறப்பதால் வரிப்பணம் கிடைப்பது மாத்திரமின்றி போதிய பொருட்களைப் பெறமுடியும் என்பதும் மாத்திரமின்றி தென்னிலங்கைக்கும் யாழ்பாணத்திற்கும் தமது புலனாய்வாளர்கள், தற்கொலை குண்டுதாரிகள், ஆயுதங்கள் என்பனவற்றை கடத்த முடியும் என்பதும் பிரதானமானது. ஆனால் ஏ - 9 பாதை இல்லாவிட்டாலும் (சற்றுச் சிரமம் இருப்பினும்) புலிகளால் அவற்றைச் செய்ய முடியும் என்பது நிராகரிக்க முடியாத உண்மையாகும். எனவே ஏ - 9 பாதையை மூடியதன் மூலம் பொருளாதார hPதியிலும் இராணுவ hPதியிலும் புலிகளை முடக்கிவிட முடியும் என அரசாங்கம் கருதுமாக இருந்தால் அது தப்பான கருத்தாகும்.

உண்மையில் ஏ- 9 பாதையை மூடியதால் புலிகளைவிட மோசமாக பாதிக்கப்பட்டிருப்பவர்கள் யாழ் குடாநாட்டு மக்களே. முன்னொருபோதும் இல்லாத அளவுக்கு அங்கு பொருட்களுக்குத் தட்டுப்பாடும் விலையுயர்வும் ஏற்பட்டுள்ளது. போதாததற்கு புலிகளுக்கு லட்சகணக்கில் கப்பம் செலுத்தும் யாழ் வர்த்தகர்கள் இச் சந்தர்ப்பத்தைப் பாவித்து பொது மக்களிடம் ஈவிரக்கமின்றி கொள்ளை லாபம் அடித்துவருகின்றனர். வெளிநாட்டு வருமானம் உள்ள யாழ் குடாநாட்டு மக்களே இன்றைய சூழ்நிலையில் தாக்குப் பிடிக்க முடியாமல் அல்லாடுகையில் அன்றாடம் உழைத்து வாழும் மக்களின் கதி என்ன? அரசாங்கத்தின் இந்தவகையான சமயோசிதமற்ற, மக்கள் விரோத செயற்பாடுகள் யாழ் குடாநாட்டு மக்கள் மத்தியில் விரக்தியையும் கோபத்தையும் உண்டு பண்ணியுள்ளதுடன், அவர்களை அரசுக்கு எதிராக திரும்பவும் வைத்துள்ளது. புலிகளின் செயற்பாடுகளுக்காக யாழ் குடாநாட்டு மக்களை அரசாங்கத்திலுள்ள சில சக்திகள் பழிவாங்குவதற்கு முற்படுவதுபோல் தெரிகின்றது. ஆனால் புலிகள் இயக்கத்தின் தோற்றத்திற்கும் அதன் இன்றைய வளர்ச்சிக்கும் காரண கர்த்தாக்கள் யாழ் குடாநாட்டு மக்கள் அல்ல. புலிகளை வளர்த்துவிட்டவர்கள் இலங்கையில் மாறிமாறி ஆட்சிக்கு வந்த அரசாங்கங்களே.

தமிழ் மக்கள் தமது தேசியப் பிரச்சினைகளை சாத்வீகமாக தெரிவித்தபோது அதை தீர்ப்பதற்கு பதிலாக இராணுவ ஒடுக்குமுறையை பிரயோகித்ததன் மூலம் ஆயுதப் போராட்டத்தை ஆரம்பித்து வைத்தது அரசாங்கமே. குறிப்பாக 1977ல் பதவிக்கு வந்த ஜே.ஆர், ஜெயர்த்தனாவின் ஐக்கிய தேசிய கட்சி அரசாங்கமே இன்றைய யுத்தத்தின் பிரதான சூத்திரதாரி ஆகும். இந்த நிலைமைகளின் தொடர்ச்சியாக புலிகள் இயக்கம் என்ற உலகின் மிகக் கொடூரமான பாசிச இயக்கம் உருவாகியுள்ளது. இந்த இயக்கத்தின் தோற்றத்தினாலேயே செயற்பாடுகளினாலும் உண்மையில் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டவர்கள் அரசாங்கம் அல்ல, தமிழ் - முஸ்லீம் மக்களே. இந்த இயக்கத்தின் செயற்பாடுகளால் தமிழினம் தேசிய இனம் என்ற அந்தஸ்தை இழந்து நாடோடி அகதிகளாக மாறியுள்ளதுடன் சாதாரண மனித வாழ்வையும் இழந்துள்ளது.

அரசாங்கத்தைப் பொறுத்தவரையில் வெறுமனே இராணுவ hPதியான நடவடிக்கைகளால் புலிகள் இயக்கத்தை ஒழித்துவிடலாம் என கருதிச் செயற்படுவது ஒருபோதும் வெற்றியளிக்ப்போவதில்லை. ஏனெனில் புலிகள் இயக்கம் ஒரு பாசிச இயக்கமாக இருந்த போதிலும் அவர்கள் தமது இருப்புக்கு தமிழ் மக்களின் அரசியல் பிரச்சினையான தேசிய இனப்பிரச்சினையையே பயன்படுத்துகின்றனர். அதன் காரணமாகவே அரசின் தவறான செயற்பாடுகளினாலும் தமிழ் மக்களின் கணிசமான ஒரு பகுதியினர் புலிகளின் பக்கமே நிற்கின்றனர். அத்துடன் இப்பிரச்சினையில் மத்தியஸ்தம் என்ற போர்வையில் குரங்கு அப்பம் பங்கிட்ட கதையாக சர்வதேச சக்திகளுகம் நுழைந்துவிட்டன.

எனவே உண்மையில் புலிகளை தோற்கடித்து தமிழ் மக்களை அவர்களது பிடியிலிருந்து விடுவிக்கவும் நாட்டை அழிவிலிருந்து பாதுகாக்கவும் அரசாங்கம் எண்ணம் கொண்டிருக்குமாக இருந்தால் முதலில் செய்ய வேண்டியது தமிழ் மக்களின் நீண்டகால தேசிய இனப்பிரச்சினைக்கு அவர்களுக்கு திருப்தி அளிக்கும் வகையில் தீர்வு காண்பதே. அரசியல் தீர்வுடன் இணைத்து புலிகளுக்கு எதிரான இராணுவ நடவடிக்கைகளையும் அரசாங்கம் கையாளுமாக இருந்தால் வெற்றி பெறுவது நிட்சயம். அரசாங்கம் அவ்வாறு செயற்படுவதாக இருந்தால் இவ்வாறான ஏ- 9 வீதி மூடுவதுபோன்ற முட்டாள்தனமான நடவடிக்கைகளை கைவிடவேண்டும். எது எப்படியிருப்பினும் தனது பிரசைகளான யாழ் குடாநாட்டு மக்களுக்கு நாட்டின் ஏனைய பகுதி மக்களைப் போல பொருட்களை தாரளமாக கிடைக்கச் செய்வதும், அவர்களது சுதந்திரமான போக்குவரத்தை உத்தரவாதம் செய்வதும் புலிகளின் கைகளில் அல்ல, மாறாக அரசாங்கத்தின் கைகளிலேயே தங்கியுள்ளது. அதை அரசாங்கம் எக்காரணம் கொண்டு தட்டிக்கழித்துவிட முடியாது.

Thanks: Thenee.com

No comments: